ஏப்ரல் 14, வெள்ளிக்கிழமை, ஆர் நவ்யா தனது பிறந்தநாளை தனது காதலன் டிடி பிரசாந்துடன் கொண்டாடினார். பிறந்தநாள் கேக் வெட்டிய உடனேயே காதலன் பிரசாந்த், கத்தியால் காதலியின் கழுத்தை அறுத்து கொன்றார்.
பெங்களூரு, லாகரே அருகே உள்ள நவ்யாவின் சிறிய குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்தது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு கனகபுராவைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த் மற்றும் நவ்யா (24). இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நவ்யா சர்வதேச பாதுகாப்புப் பிரிவில் பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நவ்யாவுக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி பிறந்தநாள் வந்துள்ளது. ஆனால், அப்பொழுது நாவ்யா வேலையில் பிசியாக இருந்ததால் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை. என்றாலும், காதலன் விட்டபாடில்லை. நாவ்யாவின் வீட்டில் கொண்டாட்டம் நடத்த வேண்டுமென வற்புறுத்தியபடியிருந்தார்.
நவ்யா கொல்லப்பட்ட நாளான ஏப்ரல் 14 அன்று பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில்,
“பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நவ்யாவுக்கு சில தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்தன. யாருடன் தொடர்பில் இருந்தீர்கள் என்று பிரசாந்த் கேட்டபோது, விவரங்களைப் பகிர மறுத்துவிட்டார். தனது போனை அவரிடம் காட்ட மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது“ என்றனர்.
பிரசாந்த் பொறாமை மற்றும் நவ்யா பல ஆண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என சந்தேகப்பட்டார்.
நாவ்யாவின் தொலைபேசி அழைப்புக்கள் குறித்து அவர்களிற்குள் சில காலமாகவே தகராறு இருந்து கொண்டிருக்கிறது.
ராஜகோபால் நகர் காவல்துறையின் கூற்றுப்படி, நவ்யா கோரமங்களா காவல்துறையை அணுகி பிரசாந்த் தன்னை “தொந்தரவு” செய்ததாக ஏற்கெனவே முறைப்பாடு செய்துள்ளார். இருவரையும் அழைத்து பொலிசார் விசாரணை நடத்தினர். நாவ்யா தனக்கு மட்டுமே சொந்தமானவள், வேறு யாருடனும் பேசக்கூடாது என பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
பொலிசாரின் விசாரணையையடுத்து, பிரசாந்த் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
எனினும், பின்னர் அவர்கள் நெருக்கமாகி விட்டனர். மீண்டும் அடிக்கடி சந்தித்து பேசினர். விரைவில் திருமணம் செய்வது பற்றியும் பேசியதாக பிரசாந்த் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மதியம் 2.30 மணியளவில் நவ்யா இரத்தம் கசிந்து இறந்த பிறகு, பிரசாந்த் இரவு 9.30 மணி வரை அவரது குடியிருப்பில் அமர்ந்திருந்தார் – பின்னர் அவர் ராஜகோபால் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கொலை செய்த ஆயுதத்தை போலீசார் கேட்டபோது, பிரசாந்த் அவர்களை நவ்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
நாவ்யாவின் கழுத்தைத் தவிர எல்லா இடங்களிலும் இரத்தக் கறைகள் இருந்தன,” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.