Friday, April 12, 2024
Homeஇலங்கை செய்திகள்தமிழீழத் தனியரசுக்காக வித்தானவர்களை உணர்வு பூர்வமாக அஞ்சலிப்போம்- தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை அறைகூவல்!

தமிழீழத் தனியரசுக்காக வித்தானவர்களை உணர்வு பூர்வமாக அஞ்சலிப்போம்- தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை அறைகூவல்!

கார்த்திகை 27 இன்று தமிழீழ தனியரசு கனவுடன் எம் மண்ணில் வித்தாகிப் போன மாவீரர்களை உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்வதற்கு தமிழர் தாயகத்தில் வாழும் அனைத்து மக்களையும் மாவீரர் துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும் ஒன்று கூடுமாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எம் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நாம் எமது மாவீரர்களையும் அவர்களுக்கான நாட்களில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க வேண்டிய தேவையும், கடமையும், தார்மீக உரிமையும் எமக்கு உள்ளது.

எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஒரு சில ஆண்டுகள் எம்மால் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்று அஞ்சலிகளை செய்ய முடியாத ஒரு பாரதூரமான சூழ்நிலை காணப்பட்டது.

எமது துயிலும் இல்லங்களில் இருந்த மாவீரர் கல்லறைகள் சிறிலங்கா அரசினால் இடித்து,அழிக்கப்பட்டு இருந்த இடமில்லாமல் அகற்றப்பட்டிருந்தன அந்த துயிலும் இல்லங்கள் இருந்த இடம் எங்கும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அக் காலப்பகுதியில் தமிழர் தாயகத்து மக்கள் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி வரும் போதெல்லாம் துயிலும் இல்லங்களுக்கு செல்ல முடியாமலும் அங்கு உறங்குகின்ற மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாமலும் மிகுந்த மன வேதனையுடன் பொது இடங்களிலும், ஆலயங்களிலும், வீடுகளிலும் இவ் மாவீரர் தின நிகழ்வுகளை அனுஷ்டித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த காலப்பகுதியில் தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் பேரெழிச்சியான முறையில் எமது மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு வாழும் எம் புலம்பெயர் உறவுகள் அந்த நிகழ்வுகளில் பெருவாரியாக பங்கெடுத்து வந்திருக்கின்றார்கள்.தற்பொழுதும் அதிகமான அளவில் பங்கெடுக்கின்றார்கள்.

தற்பொழுது சிறிலங்கா அரசில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பிறகு இம்முறை ஒரு சில துயிலுமில்லங்களில் இருந்த இராணுவம் சற்று தொலைவில் அகற்றப்பட்டிருக்கின்றது. ஆனாலும் முற்றுமுழுதாக அனைத்து துயிலும் இல்லங்களும் இன்று வரை விடுபடவில்லை.

ஆகவே இம்முறை தமிழர் தாயகம் எங்கும் பேரெழுச்சியாக அங்கு இருக்கக்கூடிய துயிலும் இல்லங்களிலும் சரி பொது இடங்களில் சரி வீடுகளிலும் சரி அனைத்து தமிழ் மக்களும் மாவீரர் தின நிகழ்வுகளை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு தயாராகிவருகின்றனர்.

இன்றைய தினம் தாயகத்தில் வாழும் அனைத்து மக்களும் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கெடுத்து வித்தாகிப் போன எமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை அரைகூவல் விடுப்பதோடு தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் வழமை போன்று இம்முறை பேரெழிச்சியாக மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன அந்த நிகழ்வுகளிலும் அங்கு இருக்கக்கூடிய எமது இளையவர்கள் குறிப்பாக அடுத்த தலைமுறையினர் அனைவரும் இந்த மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்டு எமது வரலாறுகளை அறிந்தவர்களாகவும் எமது வரலாற்றை உலகமெங்கும் அழிய விடாது பாதுகாத்துக் கொண்டு செல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என தார்மீக உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் தமிழ் மக்களின் தேசக் கனவாகிய தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்தினாலேயே கட்டியெழுப்பப்பட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு. இன்று ஆட்டம் கண்டு நிற்கும் தமிழ் வாழ்வியலில் இவற்றைப் புறம் தள்ளிவிட்டுக் கடந்த செல்ல மாவீரர்களின் ஆன்மாக்கள் ஒரு போதும் சம்மதிப்பதில்லை.

பெருமை கொள் இவ்வரலாற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை பெருமிதம் கொள்கிறது அவை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே பதியப்பட்டுள்ளன என்பது யதார்த்தமாகும்.

“தமிழரின் வீர வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு, மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டு, ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்து நிமிர்ந்தான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக் கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எங்கள் மாவீரர் என்ற தமிழீழ தேசியத்ததலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் கருத்திற்கு ஏற்ப உலக வரலாற்றில் விடுதலைக்குப் போராடியவர்கள் எல்லோரும் குருதி, கண்ணீர், வியர்வை ஆகியமூன்றையும் ஒருங்கு சேர விலையாகக்கொடுத்தே மாவீரர் என்கிற தகுதியை அடைந்தனர்.

இந்த நியதி தமிழர் தாயகத்துக்கும் பொருந்தும் . 2009 மே க்குப் பின்னர் குருதிக்கு மட்டும் சமகாலத்தில் விதிவிலக்கு நிலையுள்ளது. ஆனால் கண்ணீரும் கவலையும் தமிழ் மக்களிடம் உள்ளது. அண்டவெளியில் இருள் என்பது எப்போதும் நிரந்தரம், இதனால் அந்த இருளை ஊடறுக்கும்ஒளி எப்போதுமே தேவைப்படுகிறது.

இது ஒளிக்குரிய பிதாமகனான சூரியத்தேவனாக இருக்கலாம் இல்லையென்றால் சூரியத்தேவன் ஒளியூட்டும் உலகிலுள்ள ஒரு சிறிய மண்சுட்டியின்சுடராக இருக்கலாம்.

தமிழ் மக்களை பொறுத்தவரை ஓளி பிறந்த நாள் நவம்பர் 26.பல்லாயிரம் சுடர்களுக்குரிய நாள் நவம்பர் 27.ம் ஆகும். சூரியன் அல்லது அகல் சுடர்கள் வழங்கும் செய்தி ஒன்றே ஒன்றுதான். அது தமிழர்களின் அபிலாசைகள்மீது கவியக்கூடிய அந்தகாரத்தை ஊடறுத்து ஒளியீட்டும் கற்பிதங்கள் சார்ந்தது. தமிழினத்தின் விடுதலை வரலாறும் உதிரத்தினால் தான் எழுதப்பட்டது.விடுதலை வரலாறுகளின் சாவுகளுக்கு அர்த்தமில்லாமல் இல்லை. அவைதான்உலக வரலாற்றை இயக்கும் உந்துசக்தி. அதில் வித்துடல் சாசனம் என்னும் மாவீரர் நாள் ஒரு கலங்கரை விளக்கு.

ஒடுக்குமுறை அந்தகாரத்தில் இருந்து விடுபட்டு இனநீதி என்னும் ஒளிமிக்க பாதையில் செல்ல இந்த வித்துடல் சாசனமாகிய மாவீரர் தினம் உதவம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை தமிழ் மக்களுக்கு உண்டு. முன்னேறி நடந்த தியாகத்தின் வழிகாட்டுதலில் தமிழர் தாயகத்தின் அரசியல் இருப்பை நிலைநிறுத்த நவம்பர்26,27 ஆகிய இரண்டு தினங்களுமே முக்கிய அடையாளங்கள். ஆம் அந்த அடையாள செய்திகளின் ஒளிப்பரவல் விரவுகிறது இது வித்துடல் சாசனமாகிய மாவீரர் நாளின் ஒளிப்பரவல்!

ஒன்று சேர்ந்து பயணிப்போம் உதிக்கும் உன்னத திசை நோக்கி இவ்வாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments