Monday, March 4, 2024
Homeஇந்திய செய்திகள்பெண்ணின் கழுத்தை அறுத்து நகை பறிக்க முயற்சி…கடலில் பிடிபட்ட திருடன்!

பெண்ணின் கழுத்தை அறுத்து நகை பறிக்க முயற்சி…கடலில் பிடிபட்ட திருடன்!

சென்னை: சென்னை மெரினாவில் பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணத்தை இளைஞர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கடலுக்குள் பாய்ந்து தப்ப முயற்சித்த நிலையில், சினிமா பாணியில் போலீஸார் அவனை நீந்திச் சென்று நடுக்கடலில் பிடித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உயிரை துச்சமாக எண்ணி கடலுக்குள் நீந்திச் சென்று குற்றவாளியை பிடித்த போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆபத்தாகிறதா மெரினா கடற்கரை?
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பொழுதுபோக்கு மையமாக சென்னை மெரினா கடற்கரை உள்ளது. இரவு எத்தனை மணிக்கு வேண்டுமானாலும், மெரினாவுக்கு சென்று வரலாம் எனக் கூறும் அளவுக்கு பாதுகாப்பான பகுதியாகவும் இது கருதப்படுகிறது. ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு நிலைமை இப்படி இருந்தது கிடையாது. அந்தக் காலக்கட்டத்தில் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நிகழும் இடமாக மெரினா இருந்தது. காதல் ஜோடிகளை தாக்கி பணம் பறிப்பது, பலாத்காரம், கொலை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தன. பின்னர் போலீஸார் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக அமைதி பூங்காவாக மெரினா மாறியது. ஆனால், அந்தப் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு பயங்கர சம்பவம் நேற்று நடந்திருக்கிறது.
ஆட்டோவில் வந்த பெண்
மெரினா கடற்கரைக்கு அருகே பட்டினப்பாக்கம் வரை செல்லக்கூடிய சர்வீஸ் சாலை ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பலத்த மழை பெய்ததால், அங்கு சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று ஓரமாக நின்றுள்ளது. அந்த ஆட்டோவில் நடுத்தர வயதில் பெண் ஒருவர் இருந்துள்ளார். தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதற்காக அவர் ஆட்டோவில் பயணித்துள்ளார். இந்நிலையில், ஆட்டோ நிற்பதையும், அதில் பெண் இருப்பதையும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பல் பார்த்துள்ளது.
கழுத்தை அறுத்து..
பின்னர் ஆட்டோவுக்கு அருகே வந்த அவர்கள், மழை அதிகமாக பெய்வதால் ஆட்டோவுக்குள் சற்று நேரம் அமர்ந்துவிட்டு செல்வதாக கூறினர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர், ‘பெண் இருப்பதால் நீங்கள் இங்கு உட்காரக் கூடாது. வேறு எங்கேயாவது செல்லுங்கள்’ எனக் கூறியுள்ளார். ஆனால், அந்த நபர்கள் மதுபோதையில் இருந்ததால் ஆட்டோ ஓட்டுநர் கூறுவதை கேட்காமல், ஆட்டோவில் ஏறி அமர்ந்தனர். அப்போது திடீரென அவர்களில் ஒரு இளைஞர், அந்தப் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.
கடலுக்குள் பாயந்த போலீஸார்
பின்னர் அவர் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள்ளாக, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு அவர்கள் அங்கிருந்து ஓடினர். இதில் அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த ரோந்து போலீஸார், நகையை பறித்து சென்ற இளைஞர்களை துரத்திச் சென்றனர். இதில் 3 இளைஞர்கள் தப்பியோடி விட, ஒரு இளைஞர் மட்டும் கடலில் குதித்தார். இருப்பினும் விடாத போலீஸார், தாங்களும் கடலுக்குள் இறங்கி நீந்திச் சென்று கிட்டத்தட்ட 300 மீட்டர் தூரத்தில் அவரை பிடித்தனர்.
குற்ற வழக்குகள் நிலுவை
பின்னர் கரைக்கு அந்த இளைஞரை இழுத்து வந்து விசாரித்ததில், அவர் அயனாவரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (24) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. தப்பியோடிய 3 பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். அவர்களை தேடும் பணியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, காயமடைந்த பெண்ணை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments