மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் உள்ள கடைகளுக்கு முன்பாக சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளை ஏற்றி நினைவு வாரத்தை அனுஷ்டிக்க தயாராகி வரும் கடை உரிமையாளர்களிடம் விசாரணைகள் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள்,
மாவீரர் வாரத்தில் எமது உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எமது வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளை கட்டி ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.
இந்நிலையில் எமது வர்த்தக நிலையத்திற்கு வருகை தந்த புலனாய்வாளர்கள் எமது வர்த்தக நிலையத்தை படம் பிடித்து அருகில் உள்ள வர்த்தகர்களிடம் எமது குடும்ப விபரங்களை கேட்டறிந்தனர்.
மாவீரர் தினத்திற்கு அஞ்சலி செலுத்தும் எம்மை அச்சுறுத்தி ஊடகங்களையும் ஏனைய வர்த்தகர்களையும் பீதியிலும் அடக்குமுறையிலும் வைத்திருக்க புலனாய்வாளர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.
எனினும் எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் நவம்பர் 27ஆம் திகதி எமது உறவுகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்துவோம். மேற்படி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.