Tuesday, April 30, 2024
Homeஅரசியல்செய்திஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சிறப்பாக செயல்பட்ட  எடப்பாடி பழனிசாமி..சாதித்தது எப்படி?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சிறப்பாக செயல்பட்ட  எடப்பாடி பழனிசாமி..சாதித்தது எப்படி?

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத பரபரப்பு ஏற்பட்டது.

ஆளும் தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரையில் இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்வதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஏற்கெனவே காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் கூட்டணி தர்மப்படி காங்கிரஸ் கட்சிக்கே தொகுதியை ஒதுக்கியது தி.மு.க. எதிர்க்கட்சியான அ.தி.மு.கவில் ஏகப்பட்ட குழப்பங்கள். சட்டமன்றத் தேர்தலின்போது இருந்த அ.தி.மு.க இப்போது இல்லை. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க, ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க என்று பிரித்துக் கூறும் அளவுக்கு அக்கட்சி உள்ளது. பொதுவாக தேர்தல் நடைபெறும்போது யார் வேட்பாளர் என்று முடிவு செய்வதில் குழப்பம் இருக்கும். இந்தமுறை அ.தி.மு.கவில் யார் கட்சித் தலைமை என்பதில் கடும் குழப்பம் நிலவியது.

சட்டமன்றத் தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. எனவே, தற்போது பிரச்னைக்குரிய சூழலில் போட்டியிடமால் எடப்பாடி பழனிசாமி தரப்பு விலகிவிடும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்தது. அதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. இருதரப்பினரும் பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினர். எந்த தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கோ, ஓ.பன்னீர் செல்வத்துக்கோ ஆதரவு தருவதாக நேரடியாக அறிவிக்கவில்லை. மாறாக, இரட்டை இலைக்கு ஆதரவு என்று மறைமுக பதிலையே தெரிவித்தனர்.

இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.கவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இரு தரப்பு வாதத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றம் இருவரும் சேர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று வேட்பாளரை அறிவிக்க உத்தரவிட்டது.

இது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி தரக் கூடிய ஒன்றாகவே அமைந்தது. ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டவர், அவருக்கு அ.தி.மு.கவின் மீது எந்த உரிமையும் இல்லை என்பதே எடப்பாடி பழனிசாமியின் வாதம். ஆனால், ஓ.பன்னீர் செல்வத்தை பொதுக்குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ் மகேன் உசேன் தலைமையில் அ.தி.மு.க வேட்பாளர் பெயர் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்த வேட்பாளரின் பெயர் அதில் சேர்க்கப்படவில்லையென்று ஓ.பி.எஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், வழக்கம்போல இரட்டை இலை சின்னம் முடங்க கூடாது என்பதற்காக வேட்பாளரை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

யாரும் எதிர்பாராத வகையில் டி.டி.வி.தினகரனும் அ.ம.மு.க இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். அ.ம.மு.க வேட்பாளர் வேட்புமனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் ஜெயித்துள்ளது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர், பின்னர் எதிர்கட்சித் தலைவர் என்று கட்சிக்குள்ளும் பிடிவாதமாக இருந்தும், கூட்டணியில் சசிகலா, டி.டி.வி.தினகரனை சேர்க்க மாட்டேன் என்று பா.ஜ.கவுடனும் பிடிவாத இருந்து சாதித்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்தமுறையும் பா.ஜ.கவின் நெருக்குதலுக்கு ஆளாகாமல் அ.தி.மு.க சார்பில் தன் தரப்பு வேட்பாளரை களமிறக்கியுள்ளார்.

வெற்றிகரமாக வேட்பாளரை களமிறக்குவதுடன் எடப்பாடி பழனிசாமியின் பணி முடிந்துவிடாது. தேர்தலில் வெற்றி பெற்று காண்பிக்க வேண்டும். கட்சிக்குள் முடிவெடுப்பதில் தொடர் வெற்றி பெறும் எடப்பாடியால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. அவர் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட அ.தி.மு.க தொடர் தோல்விகளையே சந்தித்துவருகிறது.

இடைத்தேர்தல் எப்போதுமே ஆளும்கட்சிக்கு சாதகமாகவே இருந்து வரும் நிலையில், தோல்வியடைந்தாலும் அது மதிக்கத்தக்க தோல்வியாக இருக்க வேண்டும். அப்போதுதான் எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க தலைமைப் பதவிக்கு தொடர்ந்து உரிமை கோர முடியும்.

பா.ஜ.கவின் விருப்பங்களுக்கு முழுமையாக எடப்பாடி பழனிசாமி அடி பணியாமல் அவ்வப்போது எதிர்ப்பு காட்டினாலும், அவரால் பா.ஜ.கவை முழுமையாக எதிர்க்க முடியவில்லை. இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘பா.ஜ.கவுடனான கூட்டணி தொடர்கிறது’ என்று தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் ஓ.பன்னீர் செல்வத்தை முழுமையாக அ.தி.மு.கவிலிருந்து விலக்கிவிட முடியுமா என்பதும் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், இந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் குழப்பங்களைக் கடந்து விரும்பியதை சாதித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments