Friday, May 17, 2024
Homeஉலக செய்திகள்அமெரிக்காவின் ராணுவ உதவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த உக்ரைன்…

அமெரிக்காவின் ராணுவ உதவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த உக்ரைன்…

உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கி கிட்டத்தட்ட 11 மாதங்கள் ஆகின்றன. ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல உயிர்கள் பலியாகியுள்ளன. ஏராளமானோர் உயிருக்கு பயந்து வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.

உக்ரைனுக்குள் முழு அளவில் படையெடுப்பை தொடங்கிய 2022  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை ரஷ்யா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாக கூறி உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால், முதல் உலகப் போரில் அமெரிக்கா இழந்த வீரர்களை விட ரஷ்யா இந்த போரில் அதிக வீரர்களை பலி கொடுத்திருப்பதாக அர்த்தம்.

உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்த புள்ளி விவரத்தை ஷேர் செய்துள்ளது. அதில், ரஷ்யாவிற்கு சொந்தமான 3,121 பீரங்கிகள் மற்றும் 4,877 வாகனங்கள் மற்றும் எரிபொருள் பீரங்கிகள், 2,104 பீரங்கி அமைப்புகள் முழு அளவிலான தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் பல மாதங்களை கடந்த நிலையிலும் ரஷ்யாவுக்கு உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவியை அளித்து வருகின்றன. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் 2.5 பில்லியன் டாலருக்கு புதிய ராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த தொகுப்பில் உக்ரைன் கோரிய போர் டாங்கிகள் இடம்பெறவில்லை. எனினும் இதில் 59 பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், கவச வாகனங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், பெரிய மற்றும் சிறிய வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என்று பென்டகனின் அறிக்கை கூறுகிறது.

இந்த இக்கட்டான நிலையில் தங்களுக்கு ராணுவ ரீதியில் ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்காவிற்கு உக்ரைன் அரசு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எக்காரணத்தைக் கொண்டும் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் எனக் கூறி உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments