Saturday, April 27, 2024
Homeஅரசியல்செய்திஇபிஎஸ் என்ற யானையுடன், ஓபிஎஸ் என்ற எலியை ஒப்பிட வேண்டாம் - திண்டுக்கல் சீனிவாசன்.

இபிஎஸ் என்ற யானையுடன், ஓபிஎஸ் என்ற எலியை ஒப்பிட வேண்டாம் – திண்டுக்கல் சீனிவாசன்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நாளை நடைபெற உள்ள அதிமுக பிரமுகர்கள் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார்.‌ இதற்காக தேனி மாவட்டத்தில் நாளை எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர்.‌ இந்நிலையில் பெரியகுளம் – தேனி சாலையில் உள்ள புறவழிச்சாலை பிரிவில் வழங்கப்பட உள்ள வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து  முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், கே.சி.கருப்பணன் ஆகியோர் இன்று இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திண்டுக்கல் சீனிவாசன், நாளை தேனி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரளான வரவேற்பு வழங்க உள்ளனர்.‌  திண்டுக்கல்  நாடாளுமன்ற  இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது போல, வருகின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெரும் என்றார்.

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைய இருப்பதாக ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கேரளாவில் வேண்டும் என்றால் நடக்கும். அது போன்ற அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை என்பது பொய்யான தகவல். எங்களை பொறுத்தவரை ஓ.பி.எஸ் உடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டப்படி அதிமுக கட்சி, அலுவலகம், வரவு – செலவு சின்னம் உள்பட அணைத்தும் எங்களிடம் தான் இருக்கிறது. நாங்கள் தான் அண்ணா திமுக எனத் தெரிவித்தார். மேலும் எங்களோடு ஓ.பி.எஸ்-ஐ ஒப்பிடுவதையே அவமானமாகக் கருதுகிறோம். ஓ.பி.எஸ். சுண்டெலி – ஈ.பி.எஸ். யானை., யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது எப்படி சரியாகும் என்றார்.   அதிமுகவில் 99.5சதவீம் பேர் எங்களுடன்தான் இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் ஓ.பி.எஸ் துண்டு சீட்டை வைத்து கொண்டு நாங்கள் தான் கட்சி எனக் கூறி வருகிறார்.

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தங்கள் அணி போட்டியிடாமல் விட்டுக் கொடுப்போம் என ஓ.பி‌.எஸ் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு கட்சி என்றால் தேர்தலிலில் போட்டியிட வேண்டும். ஆனால் தேர்தலில் விட்டு கொடுப்போம் என ஒ.பி.எஸ் கூறுவது விந்தையாக இருப்பதாக கூறினார்.     நடைபெற உள்ள ஈரோடு இடைத்தேர்தலில், திமுக ஆட்சியில் மக்கள் படும் சிரமங்கள் மற்றும் நிறைவேற்றாத  தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைத்து பிரச்சாரம் செய்வோம் எனக் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments