Friday, May 17, 2024
Homeஅரசியல்செய்திஉதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றிருப்பது முழுக்க முழுக்க 'வாரிசு' அரசியல்தான் ."வாரிசே"போஸ்டரை வைத்து சீண்டிய விஜய் ரசிகர்கள்..

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றிருப்பது முழுக்க முழுக்க ‘வாரிசு’ அரசியல்தான் .”வாரிசே”போஸ்டரை வைத்து சீண்டிய விஜய் ரசிகர்கள்..

மதுரை: நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு ரீலிஸாக இருக்கும் நிலையில், மதுரையில் இத்திரைப்படம் தொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது டிரென்டிங்கில் உள்ள ஹாஷ்டேக் ‘#வாரிசு‘ என்பதுதான். சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், இது தொடர்பாக ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வந்தன. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றிருப்பது முழுக்க முழுக்க ‘வாரிசு’ அரசியல்தான் என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

விமர்சனம்

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டப்படுகிறது. முதலில் மு.கருணாநிதி முதலமைச்சரானார் அடுத்து அவரது மகன் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார் அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவதற்குதான் இந்த முடிசூட்டு விழா. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா என்ன? ஏற்கெனவே எல்லா துறையிலும் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் இந்த ஊழலுக்கு எல்லாம் அவர் தலைமை தாங்குவார். குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ‘வாரிசு’ அரசியலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

வாரிசு

இப்படி ‘வாரிசு’ குறித்த பேச்சுகள் ட்ரென்டான நிலையில், மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. போஸ்டரில் நான்கு படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. முதல் படத்தில் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும் அவரது மகன் ராஜீவ் காந்தியும் இருக்கின்றனர். அடுத்த படத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மூன்றாவது மற்றும் நான்காவது உள்ள படத்தில் வைகோ, துரை வைகோ மற்றும் ராமதாஸ் அவருடன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆக இந்த நான்கு படங்களுக்கு கீழ் விஜய்யின் பெரிய படத்தை போட்டு, ‘எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே வருக வருக’ என்று அச்சிடப்பட்டுள்ளது.

அரசியல் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த எவ்வித கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில் இது போன்று போஸ்டர் சர்ச்சைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது 2013ம் ஆண்டு வெளியான தலைவா படம் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் இதே போன்று போஸ்டர்கள் ஒரு சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இதனையடுத்து வெளியான கத்தி, சர்க்கார், மெர்சல், பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் அரசியில் வசனங்கள் ஆங்காங்கே இடம்பெற்றிருந்தன. எனவே இவரது அரசியல் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள் அரசியல் உள்நோக்கத்துடன் போஸ்டர்களை ஒட்டி வந்துள்ளனர்

முற்றுப்புள்ளியிலிருந்து மீண்டும் தொடக்கம்

இப்படி இருக்கையில்தான் 2020ம் ஆண்டு நவம்பரில் விஜய்யின் தந்தையும் திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என அரசியல் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிவிட்டார் என்று செய்திகள் பரவின. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து அவர் அறிக்கையை வெளியிட்டார். அதில் தனக்கும் இக்கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் எனவே தனது ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் யாரும் இக்கட்சியில் இணைந்து பணி செய்ய வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இதனால் அவரது அரசியல் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மீண்டும் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், ஆளும் கட்சி குறித்தும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments