Saturday, May 4, 2024
Homeஇலங்கை செய்திகள்தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ABVPஅமைப்பினர் நடத்திய தாக்குதல் …! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.

தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ABVPஅமைப்பினர் நடத்திய தாக்குதல் …! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் உள்ளிட்டோர் மீது ABVPஅமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை ஐஐடியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் உயிரிழந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கியின் மரணத்துக்கு நீதிகேட்டு, டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் இடது சாரி மாணவர் அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். பின்னர் மாணவர்கள் சங்க அலுவலகத்தில் ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட இருந்தது.

இந்த நிகழ்ச்சியின்போது தமிழ்நாட்டு மாணவர்கள் உட்பட இடதுசாரி மாணவர்களுக்கும்-ஏபிவிபி அமைப்பை சேர்ந்தோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் நாசருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் படங்களை அடித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனை மறுத்துள்ள ஏபிவிபி அமைப்பினர் சத்ரபதி சிவாஜி புகைப்படத்தை இடதுசாரி அமைப்பினர் தரையில் வைத்ததாகவும், சிவாஜி சிலைக்கு வைத்த மாலையை குப்பையில் வீசியதால் பிரச்னை எழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் சிகிச்சை முடிந்து மீண்டும் விடுதிக்கு திரும்பியுள்ளனர். இந்த தகராறு தொடர்பாக டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் கோழைத்தனமானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மாணவர்களின் பாதுகாப்பை பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பாதுகாவலர்களும், போலீசும் அமைதியாக வேடிக்கை பார்த்ததாகவும் சாடியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பல்கலைக்கழகங்கள் படிப்பதற்கான இடம் மட்டுமின்றி, கலந்துரையாடலுக்கும், விவாதத்துக்கும் உரிய இடம் என்றும் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் கோழைத்தனமான தாக்குதல் நடத்தியும், பெரியார், கார்ல் மார்க்ஸ் படங்களை சேதப்படுத்தியும் உள்ளது கண்டனத்துக்கு உரியது என்றும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments