Thursday, May 2, 2024
Homeஅரசியல்செய்திதமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை தென்னிலங்கை அங்கீகரிக்க வேண்டும்!

தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை தென்னிலங்கை அங்கீகரிக்க வேண்டும்!

தென்னிலங்கை ஐனநாயக போராளிகள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“பாரிய பொருளாதார நெருக்கடி நிலையின் மத்தியிலும் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடுவதற்கு, இலங்கை அதிபர் தலைமையிலான அரசாங்கம் முடிவெடுத்திருக்கின்ற சூழ்நிலையிலே,  சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும் மனித உரிமை மீறல்கள் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினாலும், நாளை மாலையில் இருந்து போராட்டம் நடத்தப் போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

மேலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறான ஒரு கொண்டாட்டம் தேவைதானா? அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையிலே இதில் கலந்து கொள்ள முடியுமா? என்ற கேள்விகளை எல்லாம் எழுப்பி கத்தோலிக்க திருச்சபையும் இதனை புறக்கணிக்க போவதாக அறிவித்திருக்கின்றது.   

பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்பன எதிர்வரும் 75வது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தியிருக்கின்றார்கள்.  அதேவேளை, பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியானது , யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பில் முடிவடையும் விதத்திலே ஒரு பாரிய பேரணிக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்

பேரணிக்கு அழைப்பு

இந்த அழைப்பிற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வெளியிட்டு இருக்கின்ற சூழ்நிலையில் சில கருத்துக்களை பொது வெளியில் முன் வைப்பது பொருத்தமானதும் அவசியமானதும் என்று கருதுகின்றோம்.

தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது இது முதல்தடவையல்ல, தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் நீதி தொடர்பில் ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டிற்கு தென் இலங்கையிலே ஐனநாயகத்தின் பெயரில் குரல் எழுப்புகின்ற போராடுகின்ற அனைத்து முற்போக்கு சக்திகளும் வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். 

13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வாரங்கள் போதும், ஆனால் சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக பகிரங்கமாக அறிவித்து இருக்கின்ற சூழ்நிலையிலே அது தொடர்பிலே அரசாங்க தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்பு குரல்கள் இப்போது எழுந்து கொண்டிருக்கின்றன.

பதவியை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களாக கடைசிவரையில் இருந்தவர்கள் இப்பொழுதும் இருந்து கொண்டிருப்பவர்கள் அரசாங்க தரப்பிலே அமர்ந்து கொண்டிருப்பவர்கள் பலர் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுத்துவதற்கு எதிராக போர் கொடி தூக்குகின்றார்கள்.

தென்னிலங்கையில் ஜனநாயக எழுச்சியை மீள கொண்டுவர தயாராக இருக்கின்ற இளைஞர் சந்ததியினருக்கு இளைஞர் யுவதிகளுக்கும் அரசியல் நடவடிக்கையாளர்களுக்கும் தொழிற்சங்கவாதிகளுக்கும் ஒரு செய்தியினை தாழ்மையாகவும் உறுதியாகவும் சொல்ல விரும்புகின்றோம்.   

தமிழ் மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையிலே இந்த நாட்டிலே ஆட்சி அமைப்பு முறையை மாற்றி அமைப்பதற்கு சிங்கள முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும்.

ஐனநாயக போராளிகளாக தென் பகுதியிலே மக்கள் மத்தியில் உலவி வருகின்றவர்கள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.   

எனவே தமிழ் மக்களின் கோரிக்கையை அவர்கள் ஏற்காதவரையில் அவர்களின் ஜனநாயக ரீதியான எந்த ஒரு போராட்டத்திற்கும் தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காது.

ஆகவே தென்பகுதியில் ஜனநாயக ரீதியில் போராடும் இளைஞர் யுவதிகள் அரசியல்வாதிகள் முற்போக்கு சக்திகள் எமது தமிழ் மக்களின் அரசியல் நீதியினை ஏற்க வேண்டும்”  எனவும் தெரிவித்தார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments