Monday, April 29, 2024
Homeஇந்திய செய்திகள்பட்ஜெட் 2023: கல்விக் கடன் தள்ளுபடி.. கல்வித் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன?

பட்ஜெட் 2023: கல்விக் கடன் தள்ளுபடி.. கல்வித் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன?

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்கிறார். இது அவரின் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே.

இதனால், பட்ஜெட்டில் கல்வித் துறை குறித்த எதிர்பார்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் 3.1 சதவிகித நிதி ஒதுக்கப்பட்டது. பள்ளிக் கல்விக்கு 63,449 கோடி ரூபாயும், உயர்கல்விக்கு 40,828 கோடி ரூபாயும் என கல்வித் துறைக்கு 1, 04, 277 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும் எனவும், 200 கல்வி தொலைக்காட்சிகள் தொடங்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

எனினும், இந்த திட்டங்கள் தொடக்க நிலையிலேயே இருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். காலத்திற்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றம் அவசியம் எனவும், பள்ளி, கல்லூரிகளில் நவீன ஆய்வகங்கள் அமைக்க அதிக நிதி தேவை எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்புகள் மாணாக்கர்களிடம் தற்போதும் நீடிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

கிராமப்புற மாணவர்கள் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் எனவும், தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் இடையே இணைப்பை ஏற்படுத்தி, திறன் மேம்பாட்டிற்கு வழிவகுக்க திட்டங்கள் தீட்ட வேண்டும் என்பதும் கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

புதிய சிந்தனையுடன், மேம்பட்ட படைப்புத்திறனுடன், உலக அளவிலான போட்டிக்கு, இந்திய மாணாக்கர்களை தயார் செய்யும் வகையில் கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் தேசிய வங்கிகளில் மாணவர்கள் வாங்கியுள்ள கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதும் பிரதான கோரிக்கையாக உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments