Friday, May 17, 2024
Homeஉலக செய்திகள்மனித பொம்மைகள் நிறைந்த ஜப்பானின் விநோத கிராமம்.!

மனித பொம்மைகள் நிறைந்த ஜப்பானின் விநோத கிராமம்.!

மலை கிராமங்களை பொறுத்தவரை மக்கள் தொகை என்பது குறைவாகவே இருக்கும். மொத்த எண்ணிக்கையே சில நூறுகளில் இருப்பதை பார்த்திருப்போம். வேலை, படிப்பிற்காக மக்கள் நகரங்களை நோக்கி வந்துவிட்டால் அந்த கிராமத்தின் மக்கள் குறைந்து கிராமமே இல்லாமல் போகும். ஆனால் ஜப்பானில் மக்கள் குறைந்ததை ஈடுகட்ட செய்த செயல் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஜப்பான்காரன் எதை எதையோ கண்டு பிடிச்சுருக்கான் … என்று காமெடியாக சொல்லி கேட்டிருப்போம். தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னோடியாக இருக்கும் ஜப்பான் மக்கள் தொகையில் பின்தங்கி தான் உள்ளனர். அதே போல நகரமயமாக்களில் ஓடி கொண்டு இருக்கின்றனர். இதனால் பல கிராமத்தில் உள்ள மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

அப்படி ஜப்பானின் ஷிகோகுவின் ஒதுக்குப்புறமான ஐயா பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிறிய கிராமமான நாகோரோவில் சுமார் 300 மக்கள் வசித்து வந்தனர். ஆனால் பெரும்பாலான மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்ந்தால் இந்த கிராமத்தின் மக்கள் தொகை 35 ஆக குறைந்தது. மக்கள் இல்லாமல் ஊர் வெறிச்சோடி கிடந்ததை பார்த்து மனம் நொந்து கிடந்தனர் கிராமத்து மக்கள்.

2002 சமயத்தில் தனது தாயார் இறந்த பிறகு நோய்வாய்ப்பட்ட தந்தையைப் பார்க்க ஒசாகாவிலிருந்து பிறந்த கிராமமான நாகோரோவுக்கு சுகிமி அயனோ என்ற கலைஞர் வந்தார். அவரது வயலில் பறவைகள் வந்து தானியங்களை உண்ணாமல் இருக்க அப்பாவின் பழைய ஆடைகளை வைத்து ஒரு சோளக்காட்டு பொம்மையை செய்து வைத்துள்ளார்.

அந்த கிராமத்து ஆள் ஒருவர் அந்த பொம்மையை பார்த்து அவரது அப்பா என்று நினைத்து ஹலோ என்று சொல்லி சென்றுள்ளார்.அப்போது தான் ஒரு பொறி தட்டியுள்ளது. அந்த ஊரில் இறந்த மற்றும் ஊரை விட்டு நகரங்களுக்கு சென்ற மக்களை போன்ற உருவத்தை பொம்மைகளாக உருவாக்க முடிவு செய்தார். அது அந்த மனிதர்கள் இல்லை என்ற எண்ணத்தை போக்கும் என்று நம்பினார். அவர் சிறுவயதில் பழகிய சில நபர்களது உருவங்களை பொம்மைகளாக செய்யத் தொடங்கினார்.

முதலில் சில ஆள் உயர பொம்மைகளை உருவாக்கி கிராமத்தின் கடைகள், பேருந்து நிறுத்தங்கள், பொது இடங்களில் உள்ள இருக்கைகள் போன்ற முக்கிய பகுதிகளில் அமர்ந்திருப்பது போலவும் நிற்பதை போலவும் நட்டு வைத்தார். இதை கண்ட மக்கள் ‘இந்த ஐடியா நல்லா இருக்கே’ என்று அவர்களும் பொம்மைகளை செய்ய முன் வந்துள்ளனர். 2022 வரை சுமார் 350 ஆள் உயர பொம்மைகளை செய்து கிராமத்தின் அனைத்து பகுதிகளிலும் வைத்துள்ளனர்.

கிராமத்தில் ஆட்கள் இல்லை என்ற எண்ணம் வராமல் இருக்க ஆரம்பிக்கப்பட்ட முயற்சி கடைசியில் இங்கு இருக்கும் மனிதர்களை விட பத்து மடங்கு பொம்மைகளை கொண்ட பொம்மை கிராமமாக மாறிவிட்டது. உள்நாட்டில், நாகோரோ கிராமத்தை பொம்மை கிராமம் அல்லது ஸ்கேர்குரோ கிராமம் ( ககாஷி-நோ-சாடோ ) என்று அழைக்கின்றனர்.

அந்த கிராமத்தை விட்டு போன மக்கள் கூட இன்னும் அந்த ஊரில் இருப்பது போன்ற எண்ணத்தை இது உருவாகியுள்ளது. கலகலக்கும் சத்தங்கள் ஏதும் இல்லாமல் போனாலும் மனிதர்கள் இருப்பது போன்ற உணர்வை உருவாக்கி அந்த பொம்மைகளோடு வாழ்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments