Friday, May 17, 2024
Homeஅரசியல்செய்திமூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்ட முக்கிய பதவி.

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்ட முக்கிய பதவி.

சென்னை : மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு முதன்மை செயலாளர் பதவியில் இருந்து தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழக அரசுப் பணியில் 1992-ஆம் ஆண்டில் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 8 பேரின் பதவி நிலையை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே முதன்மைச் செயலாளராக வகிக்கும் அதே துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளராக இருக்கும் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அதே துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பதவி உயர்வு
இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜெ.ராதாகிருஷ்ணன் (கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர்), ராஜேந்திரகுமார் (மத்திய அரசின் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை கூடுதல் செயலாளர்), நீரஜ் மிட்டல் (தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சர்வீஸ் கூடுதல் தலைமை செயலாளர்), மங்கத் ராம் சர்மா (பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர்) ஆகியோர் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்த்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலர் அந்தஸ்து
மேற்கண்ட 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தற்போது முதன்மைச் செயலாளராக உள்ளனர். இவர்கள் அனைவரும் 1992ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தமிழக அரசு, தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது. தலைமைச் செயலாளர் பதவி ஒன்றுதான் உள்ளதால், 8 அதிகாரிகளும் கூடுதல் தலைமைச் செயலாளர் என்று அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.ராதாகிருஷ்ணன்
முன்னாள் சுகாதாரத்துறை செயலரும், தற்போதைய கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளராக இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி கமிஷன், அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் மீதும் விசாரணைக்கு பரிந்துரைத்தது. மேலும், கால்நடை மருத்துவரான ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளர் தகுதியின் அடிப்படையில் ஒரு மருத்துவர் என கூறாமல் இருப்பதே உகந்தது என ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ப்ரொமோஷன்
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்க்கு சிக்கல் ஏற்படும் என கருதப்பட்ட நிலையில், அவருக்கு முக்கியமான பொறுப்பையும் சமீபத்தில் அளித்தது தமிழக அரசு. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பொறுப்பு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் இருந்து உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. இந்நிலையில், அவருக்கு ப்ரொமோஷனும் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments