Thursday, May 16, 2024
Homeஇந்திய செய்திகள்கர்நாடகாவில் பரவிய ஜிகா வைரஸ், சிறுமியை தாக்கிய சோகம்..பாதுகாத்து கொள்ளவது எப்படி?

கர்நாடகாவில் பரவிய ஜிகா வைரஸ், சிறுமியை தாக்கிய சோகம்..பாதுகாத்து கொள்ளவது எப்படி?

பெங்களூர்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக மாவட்டங்கள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வைரஸ் எப்படி பரவுகிறது? ஆபத்தானதா? ஜிகா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் இருந்து கிளம்பியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் 2 ஆண்டுகளுக்கு மேலாக முடக்கிபோட்டது. இந்தியா முழுவதும் பல கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொத்து கொத்தாக ஏராளமானவர்கள் மரணமடைந்தனர்.

தற்போது இந்த கொரோனா வைரஸ் பரவல் இந்தியா உள்பட பல நாடுகளில் முடிவுக்கு வந்துள்ளது. இது ஆறுதலான விஷயமாக உள்ளது. இருப்பினும் கூட திடீரென்று புதிய வைரஸ் பாதிப்புகளால் பொதுமக்கள் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் ஜிகா பாதிப்பு

அந்த வகையில் தான் தற்போது தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சிறுமியை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

உறுதி செய்த புனே ஆய்வகம்

மேலும் அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டெங்கு, சிக்கன்குனியாவுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் ரத்த மாதிரி பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேரில் ஒருவருக்கு பாசிட்டிவ்

இதுபற்றி கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், ‛‛ராய்ச்சூரில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 3 பேரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 2 பேருக்கு நெகட்டிவ் வந்தது. 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானது. சிறுமியின் கிராமம் உள்பட அதனை சுற்றிய கிராமங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகம் இருந்தால் பரிசோதனை

கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது இதுதான் முதல் முறை. இதனால் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நன்றாக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியை சுகாதாரத்துறை தீவிரமாக செய்து வருகிறது. ” என்றார். மேலும் ராய்ச்சூர் மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் நபர்கள் மீது சந்தேகம் இருந்தால் புனே ஆய்வகத்துக்கு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

கர்நாடகாவில் முதல் முறை

முன்னதாக இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் தான் முதல் முறையாக கர்நாடகாவில் தற்போது ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 ஜிகா வைரஸ் எப்படி பரவும்?

ஜிகா வைரஸ் என்பது கொசு மூலம் பரவி வருகிறது. ஏடிஸ் வகை கொசு கடிப்பதால் தான் இந்த பாதிப்பு மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வகை கொசு தான் டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் காரணமாக உள்ளது. இந்த ஜிகா வைரஸ் 1947 ல் முதல் முதலாக உகாண்டாவில் கண்டறியப்பட்டது. ஜிகா வைரஸ் பாதிப்பு என்பது பெரும்பாலானவர்களுக்கு தீவிரமான பிரச்சனையாக மாறுவது கிடையாது. இருப்பினும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும்பட்சத்தில் அது கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என சுகாதாரத்துறை அறிஞர்கள் கூறி உள்ளனர்.

தடுப்பது எப்படி? ஜிகா வைரஸை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் பொதுவாக பகலில் தான் மனிதர்களை கடிக்கும். அதிகாலை, மாலை வேளைகளில் இந்த கொசுக்கள் அதிகமாக சுற்றி திரியும். இந்த கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். இதனால் பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தை மிகவும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை பொதுமக்கள் குடித்து வருவதோடு, கை, கால்களை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது அவசியமாகும். மேலும் வீட்டில் கொசுக்கள் நுழையாமல் தடுப்பு நடவடிக்கை எடுத்து கொண்டால் இன்னும் சிறப்பானதாகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments