Tuesday, May 7, 2024
Homeஇந்திய செய்திகள்குடிநீர் தொட்டியில் மனித கழிவு … கொந்தளித்த மக்கள் …குற்றவாளிகளுக்கு வலை வீசும் போலீஸ்.

குடிநீர் தொட்டியில் மனித கழிவு … கொந்தளித்த மக்கள் …குற்றவாளிகளுக்கு வலை வீசும் போலீஸ்.

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வந்த பகுதியில் இருந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக 20 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர் காவல்துறையினர்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் ஆய்வு செய்வதற்காக ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை செய்த போது அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பட்டியல் இனத்து மக்களை அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.

குடிநீரில் மலம்
மேலும் அங்கு உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பட்டியல் இனத்து மக்களை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்தார்.

மேலும் அந்த டீக்கடை உரிமையாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கம் செய்ய பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் இதேபோன்று கோயிலில் சாமி ஆடி தரக்குறைவாக பேசிய மூதாட்டி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்

சமரச பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

கோவிலில் வழிபாடு
மேலும் அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் வழிபடுவதற்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது. இரட்டை குவளை முறை குறித்து உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து வழிபாடு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சிறப்பு விசாரணை குழு
இந்த நிலையில் மலம் கலக்கப்பட்ட மேல்நிலைத் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்த நபர்களை போலீசார் தற்போது வரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்த நபர்கள் குறித்து விசாரிப்பதற்காக திருச்சி சரக டிஐஜி உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் 17 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவானது அமைக்கப்பட்டிருக்கிறது.

20 பேர் சம்மன்
தற்போது இந்த குழுவினர் சம்பந்தப்பட்ட கிராமத்திலேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. அந்த விசாரணை அடிப்படையில் அந்த கிராமம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 20 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இதையடுத்து

அவர்கள் 20 பேருக்கும் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. சிறப்பு புலனாய்வு குழு முன் அவர்கள் ஆஜரான பிறகு அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் கூறியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments