Thursday, May 16, 2024
Homeசினிமாதேடித்தேடி போவேன்.. எம்ஜிஆர் கொடுத்த ஜப்பான் கேமரா.. தீவிர ரசிகர் சொன்ன நெகிழ்ச்சிக் கதை!

தேடித்தேடி போவேன்.. எம்ஜிஆர் கொடுத்த ஜப்பான் கேமரா.. தீவிர ரசிகர் சொன்ன நெகிழ்ச்சிக் கதை!

மதுரை முதல் தேனி வரை நடந்தே சென்று காசை மிச்சப்படுத்தியும் , மாத சம்பளத்தில் பெரும்பகுதியை எம்ஜிஆரின் புகைப்படங்கள் புத்தகங்கள், சிடிகள், கடிதங்கள் வாங்குவதற்கு செலவழித்து தற்போது வரை ஐந்து லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ள தீவிர எம்ஜிஆர் ரசிகர் பற்றிய செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

எம்ஜிஆர் பிறந்த நாள் :-

தமிழக முன்னாள் முதலமைச்சரும், ஏழைகளின் தலைவராகவும் , அதிக மக்கள் செல்வாக்கு மிக்க மக்கள் தலைவராக வாழ்ந்தவர் எம் ஜி ராமச்சந்திரன். அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளான ஜனவரி 17 தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டப்பட்டு வருகிறது.

1917 ஆம் ஆண்டு பிறந்து 1987 ஆம் ஆண்டு உலகை விட்டு பிரிந்து சென்றாலும் , அவர் நினைவுகள் என்று தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. அதற்கு மிகப்பெரிய உதாரணமாக திகழ்ந்து வருகிறார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தீவிர MGR ரசிகரான ராஜதாசன்.

தேனி மாவட்டம் தேனி நகர் பகுதியை சேர்ந்த 58 வயதாகும் ராஜதாசன் தேனி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

தீவிர எம்ஜிஆர் ரசிகரான இவர் தற்போது வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் மீது அதீத பற்று கொண்டு உள்ளார் .

தனது சிறு வயது முதலே எம்ஜிஆரின் கருத்துக்களால் கவரப்பட்டு அவர் குறித்த புகைப்படங்களைச் சேகரிப்பதும் எம்ஜிஆர் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதிலும் ஆர்வத்துடன் இருந்து எம்ஜிஆரின் அறிய புகைப்படங்கள், அவர் கடைசி வரை நடித்த திரைப்படங்கள் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் , பற்றி வெளிவந்த புத்தகங்கள் என பல்வேறு புகைப்படம் மற்றும் புத்தகங்களை சேகரித்து வைத்து உள்ளார்.

தனக்கு கிடைக்கும் சம்பளப் பணத்தில் பெரும் பகுதியை எம்ஜிஆரின் குறித்த புத்தகங்களை வாங்குவதிலும் அவரின் புகைப்படங்களைச் சேகரிப்பதிலுமே செலவழித்து வந்துள்ளார்.

இதுவரை தனது வாழ்நாள் முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை எம்ஜிஆர் புகைப்படம் எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட புத்தகம் வாங்குவதில் செலவழித்து உள்ளார். புத்தக பிரியர்கள் பலர் உள்ளனர். புத்தக பிரியராக உள்ள ராஜதாசன் இதில் சற்று வித்தியாசமாக தோன்றுகிறார்.

எம்ஜிஆர் புகைப்படம் போட்டு எந்த ஒரு புத்தகத்திலும் அட்டை படமாக எம்ஜிஆர் புகைப்படம் வெளி வந்தால் , புத்தகத்தை படிப்பதற்கு வாங்குவாரா இல்லையோ எம்ஜிஆர் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக புத்தகங்களை வாங்கி அடுக்கடுக்காக வைத்துள்ளார் .

தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் :-

எம்ஜிஆர் எங்கெங்கெல்லாம் பிரச்சாரக் கூட்டங்கள் மேடை நாடகங்கள் நடத்துகிறாரோ அங்கெல்லாம் தான் சேர்த்து வைத்திருந்த அரியவகை புகைப்படத்துடன் எம்ஜிஆரை சந்திப்பதற்காகப் புறப்பட்டு விடுவார்.

எம்ஜிஆர் படங்களில் பேசும் கருத்துக்களை தன் வாழ்க்கையில் தொடர்புப்படுத்தி தனக்கென அமைத்து அதனைப் பின்பற்றி வரும் எம்ஜிஆர் ரசிகராக வலம் வருகிறார்.

எம்ஜிஆர் பிறந்த முதல் இறந்தது வரை அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து அவரைப் பற்றிய முழு விவரங்களையும் அடுக்கடுக்காக அடுக்குகிறார் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான ராஜதாசன்.

எம்ஜிஆர் திரைப்படத்தின் சிடிகளையும் வாங்கி பலமுறை அனைத்து திரைப்படங்களையும் பார்த்து ரசித்துள்ளார் . திரையரங்கில் பழைய எம்ஜிஆர் திரைப்படங்கள் மறு ஆக்கத்தில் வெளிவந்தாலும் திரையரங்குக்கு சென்று திரைப்படம் பார்க்கும் முதல் ஆளாக உள்ளார் ராஜதாசன்.

இது குறித்து தீவிர எம்ஜிஆர் ரசிகரான ராஜதாசன் கூறுகையில் , ” சிறு வயது முதலை எம்ஜிஆர் மீது எனக்கு அதீத பற்று உள்ளது. அவரின் ஒவ்வொரு அசைவுகளும் எனக்கு தெரியும். அவரை பலமுறை சந்தித்தும் உள்ளேன் .

1936 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்த முதல் திரைப்படம் ஆன சதிலீலாவதி முதல் நல்லதை நாடு கேட்கும் திரைப்படம் வரை உள்ள புகைப்படங்களைச் சேகரித்து வைத்துள்ளேன். எம்ஜிஆர் நடித்த அனைத்து திரைப்படங்களின் சி டி டிவிடிகளை சேகரித்து வைத்து உள்ளேன்.

திரைப்படத்தில் எம்ஜிஆர் தோன்றிய காட்சிகளில் வெளிவந்த புகைப்படங்கள், எம்ஜிஆரின் அரிய புகைப்படங்கள் , கிடைக்காத புகைப்படங்கள் , அவர் நடித்த திரைப்பட பட்டியல் , அரசியலில் எம்ஜிஆர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்களும் அரசியல் கட்சித் தலைவர்களை எம்ஜிஆர் சந்திக்கும் புகைப்படங்களும் எம்ஜிஆர் எழுதிய அரிய வகை கடிதங்களும் அறிய வகை புகைப்படங்களையும் வைத்து உள்ளேன்.

பல சமயங்களில் எம்ஜிஆர் அழுதது இல்லை என்று ஒரு தகவல் உள்ளது . ஆனால் அவரை அறியாமல் ஒரு சமயத்தில் அழுத புகைப்படம் என்னிடம் உள்ளது அதனை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.

இப்படியும் இருக்க முடியுமா?

நடிகர் சிவாஜி, ஜெய்சங்கர் மற்றும் பல நடிகர்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள், இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் ராஜீவ்காந்தி, மொரார்ஜி தேசாய் ஆகியோருடன் உரையாடும் புகைப்படங்கள், தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடித்த முரசே முழங்கு என்னும் நாடகத்தை எம்ஜிஆர் தலைமை தாங்கி நடத்திய எம்ஜிஆர் ஸ்டாலின் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைத்து உள்ளேன்.

எம்ஜிஆருக்குத் துப்பாக்கிச் சூடு சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் புகைப்படம் உள்ளிட்டவைகளும் வைத்து உள்ளேன். சிறுக சிறுக சேமித்து பல்வேறு புகைப்படம் கடிதங்கள் ஆகியவற்றை சேமித்து வைத்துள்ளேன்.

பல சமயங்களில் மதுரைக்கு நடந்தே சென்று அதற்கான செலவு மிச்ச படுத்தி புகைப்படம் மற்றும் புத்தகங்கள் வாங்க செலவழித்துள்ளேன். என் சிறு வயதில் நான் முதன் முதலில் பார்த்த எம்ஜிஆர் படமான 1967-ல் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை அந்த படம் பார்த்த முதல் எம்ஜிஆரின் ரசிகனாக மாறினேன்.

அநீதிகளை தட்டிக் கேட்பது பெரியவர்களை மதிப்பது இளைஞர்களுக்கு நல் வழிகளை காட்டுவது போன்ற காட்சிகள் என்னை கவர்ந்து அவரின் தீவிர ரசிகராக மாற்றியது.

அன்றிலிருந்து இன்று வரை வார இதழ் மாத இதழில் வெளியாகும் அவர் புகைப்படம் எங்கிருந்தாலும் அதை சேகரிக்க தொடங்கினேன்.

எம்ஜிஆரை நேரில் சந்தித்தபோது எனக்கு அவர் நினைவாக அவரின் கேமராவை பரிசாக அளித்தார் தர்மம் தலைகாக்கும் படத்தில் பயன்படுத்திய ஜப்பான் கேமரா அது, தற்போது வரை அதை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.

சென்னை தலைமைச் செயலகத்தில் எம்ஜிஆரின் புகைப்படங்களை வரலாறுகள் ஆகியவை வைத்து அருங்காட்சியம் அமைத்தால் எம்ஜிஆரை தெரிந்து கொள்ள வரக்கூடிய இளைஞர்களுக்கு நல் வாய்ப்பாக அமையும்” என்ற கோரிக்கையும் முன் வைத்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments