Thursday, May 2, 2024
Homeஅரசியல்செய்திபொங்கல் பரிசில் என்னென்ன பொருட்கள் இடம்பெறும்… அறிவிப்பு எப்போது?

பொங்கல் பரிசில் என்னென்ன பொருட்கள் இடம்பெறும்… அறிவிப்பு எப்போது?

சென்னை: பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், அரிசி, சர்க்கரை வழங்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆவின் நெய் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பானது பச்சரிசி, வெல்லம், கரும்பு உடன் ரொக்கப்பணமும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றதால் பொங்கலை முன்னிட்டு கொடுக்கப்பட்ட ரூ.2500 பலராலும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும், கொரோனா கால நிதியாக ரூ 4000 இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கப்பட்டன. ரொக்கம் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு தை பொங்கலை முன்னிட்டு, வழக்கமான அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை மற்றும் கரும்புடன், பொருட்களுக்குப் பதில் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாயை வங்கிக்கணக்கில் வழங்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டு, வங்கிக்கணக்கு விவரங்களை பெறும் பணிகளும் நடைபெற்றன.
இதற்கிடையே, 2.23 கோடி குடும்ப அட்டைகளில் 14,86,582 அட்டைகளின் வங்கிக்கணக்கு, ஆதார் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில், மூத்த அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமைச் செயலர், துறை செயலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்தை நேரில் வழங்குவதுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. தேவையான நிதி, பொருட்கள் இருப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்பட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பில் 100 மி.லி. ஆவின் நெய் இடம்பெற்றது. அதேபோன்ற பரிசுத் தொகுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

இதனிடையே பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக நெய் தயாரித்து வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு வழங்க, எங்களிடம் போதுமான அளவுக்கு ஆவின் நெய் தயாராக இருக்கிறது என்றும் ஆவின் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை சில தினங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்றும், ஜனவரி முதல் வாரத்தில் திட்டம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ரேசன் கடையில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments